search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவமனைகளாக மாறும் மருந்து கடைகள்
    X

    மருத்துவமனைகளாக மாறும் மருந்து கடைகள்

    • பஸ் போக்குவரத்து குறைவான மலை கிராமங்கள் அதிகமாக உள்ளது.
    • ஊசி போடுதல், குளுக்கோஸ் செலுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் மலை கிராமப் பகுதிகளாக உள்ளது. குறிப்பாக பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் பஸ் போக்குவரத்து குறைவான மலை கிராமங்கள் அதிகமாக உள்ளது.

    அரசு மருத்துவமனைகளும், பேரூராட்சி சில கிராமப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. அதிலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பொது மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் போது அக்கறை எடுத்து மருத்துவம் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் அதிக அளவில் உள்ளது.

    இதை சாக்காக பயன்படுத்திக் கொண்ட போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கையில் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களையும், வயதானவ ர்களையும் பேருந்து வசதி இல்லாததால் அவர்களை முடிந்த அளவிற்கு இருசக்கர வாகனங்களிலும் சிலர் செலவு செய்து ஆட்டோ, கார் மூலமாகவும் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர்.

    வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் ஒரு மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ வாடகை 300, மருத்துவமனை செலவு 500 என குறைந்தது 800 ரூபாய் செலவு செய்யும் நிலை நீடிக்கிறது.அரசு மருத்துவமனைகளுக்கு செல்லலாம் என்றால் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறு மருத்துவமனைகள் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமலும், சரியாக அக்கறை எடுத்து நோயாளிகள் மீது கவனம் செலுத்தாததாலும் பெரும்பாலான பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இதனால் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை பொதுமக்கள் நாடி செல்லும் சூழல் நிலவுகிறது. அங்கும் சிறு உடல் நலம் பாதிக்கப்பட்ட சென்றாலும் குறைந்தது 500 ரூபாய் மருத்துவ கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் மேற்கண்ட சிரமங்களை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வீடு தேடி வரும் போலி மருத்துவர்களை நாடுகின்றனர்.

    அவர்கள் போன் செய்தால் வீடு தேடி வந்து ஊசி போட்டுவிட்டு செல்கின்றனர். கட்டணம் 100 அல்லது 200 மட்டுமே வாங்குகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் குக்கிராமம் , மலை கிராமம், சிறு நகரங்கள், ஊராட்சி போன்ற பகுதிகளில் மருத்துவமனைகள் இல்லாமல் இருந்தாலும் கூட தனியார் மருந்தகங்கள் மூலம் சட்டவிரோத மாக மருத்துவமனைகளாக மாறி சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர்.

    இது மிகவும் தவறான செயல். சில மருந்தகங்கள் மருத்துவமனைகளாக மாறி பொதுமக்களுக்கு பரிசோதனை செய்வது, ஊசி போடுதல், குளுக்கோஸ் செலுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

    இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அவர்கள் சரியான அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு மருந்தகங்கள் எல்லாம் மருத்துவ மனைகளாக மாறி வருவதை கருத்தில் கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×