கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

விஜயநகரர் காலத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது தெரியவருகிறது.தானமளித்ததை தெரிவிக்கும் எழுத்துப் பொறிப்பு பித்தளை கவசத்தின்கீழ் பட்டி ஒன்றில் வெட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், மாவட்ட அரசு அருங்காட்சி யகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், புதிதாக கட்டப்பட்டுள்ள வாகன வைப்பு அறையில், விஜயநகரர் காலத்தைச் சேர்ந்த சிறிய கல்வெட்டினைக் கண்டறிந்தனர்.

இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

இக்கல்வெட்டு விஜயநகரர் காலத்தைச் சேர்ந்தது. இது ஹரிஹரன் குமாரன் இம்மடி என்று குறிப்பிடுவதிலிருந்து, இக்கல்வெட்டு இரண்டாம் ஹரிஹரனின் மகனான இரண்டாம் புக்கராயனை குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்பகுதி உடைந்துள்ளது. எனவே இக்கோவில் விஜயநகரர் காலத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது தெரியவருகிறது.

மேலும் இச்சுவற்றில் உள்ள தவழும் கிருஷ்ணர், காலிய கிருஷ்ணர் மற்றும் குழல் ஊதும் கிருஷ்ணர் ஆகிய சிற்பங்களும் விஜயநகரர் காலத்தைச் சேர்ந்தவைகளாகும்.

அதே போல், இக்கோவிலின் பழைய தேரில், 1898ல் இந்த தேரை லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு, வாடமங்கலம் ஜாகிர்தார் தர்மாசாரி என்பவர் தானமளித்ததை தெரிவிக்கும் எழுத்துப் பொறிப்பு பித்தளை கவசத்தின்கீழ் பட்டி ஒன்றில் வெட்டப்பட்டுள்ளது. இதனை செய்த சிற்பி கிருஷ்ணகிரி மணியகாரர் வெங்கடாசாரியின் வளர்ப்பு மகன் வெங்கடாசாரி என்பவராவார்.

இந்த தேரும் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், சரண்குமார், முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com