

அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ஊடுபயிராக மட்டுமல்லாமல் தனிப்பயிராக பாக்கு சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னையில் ஊடுபயிராக பாக்கு, ஜாதிக்காய், வாழை, மிளகு தானியங்கள் மற்றும் காய்கறிகளையும் பயிரிட்டு விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள்.
அரூர் சுற்று பகுதிகளான கோட்டப்பட்டி, நரிபள்ளி, சிக்களுர், சூரநத்தம், சிட்லிங், உள்ளிட்ட பகுதிகளில் தனிப்பயிராக பாக்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி கூறியதாவது:
பாக்கு மரங்கள் 5 ஆண்டுகளில் தொடங்கி 50 ஆண்டுகள் வரை வருமானம் தரக்கூடியது. பாக்கு ரகங்களில் மங்களா, சுபஹல்லி குட்டை என பல்வேறு ரகங்கள் உள்ளது. இந்த பகுதியில் அதிகளவில் மோஹித் ரகமே பயிரிடப்படுகிறது. நடவுக்குத் தேவையான நாற்று களை கருமந்துறை பழப் பண்ணையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆனாலும் அனுபவத்தின் அடிப்படையில் தரமான நாற்றுக்களை நாமாகவே உற்பத்தி செய்து கொள்ள தாய் பாக்கு மரங்களில் சேகரிக்கிறோம். அதனை நாற்றங்காலில் பாதியை செங்குத்தாக நட்டு வைக்கிறோம்.
பின்னர் அதன் மீது நேரடியாக வெயில் படாமல் இருக்க தென்னை ஓலைகளால் மூடி தினசரி தண்ணீர் தெளித்து வருகிறோம்
சுமார் 2 மாதங்களில் விதைகளில் 90 சதவீதம் மங்களா ரகம் தரமான பழங்களை முளைவிட்டிருக்கும். இந்த பருவத்தில் பிடுங்கி நேரடியாக மண்ணில் புதைத்து வயலில் நடவு செய்யலாம். ஆனால் நாற்றுகள் மீது மேல் நோக்கி நேரடியாக சூரிய ஒளி படும்போது இலைகளில் சூரியக்கருகல் நோய் தாக்கக்கூடும்.
பாக்கு மரங்களுக்கு அவ்வப்போது வேப்பம் புண்ணாக்கு இட்டு வந்தால் பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதில்லை.வருடத்துக்கு 5 பருவத்திற்கு மேல் அறுவடை செய்ய முடியும். சராசரி ஏக்கருக்கு 500 கிலோ வரை மகசூல் பெறமுடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.