search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி 18 பண்டிகை காவிரி ஆற்றுக்கு செல்ல தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றம்
    X

    பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கும் காவிரி ஆற்று பகுதியை படத்தில் காணலாம்.

    ஆடி 18 பண்டிகை காவிரி ஆற்றுக்கு செல்ல தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றம்

    • காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு ஆற்றுக்கு செல்ல தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
    • மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், முளைப்பாரி கொண்டு சென்று காவேரி ஆற்றில் விடுவதற்கும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை தடை விதித்துள்ளது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி 18 பண்டிகை அன்று பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடுவது வழக்கம். அதேபோல் புதுமணத் தம்பதிகள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தாலி கயிறு பிறித்து கட்டுவதும், அங்கு சாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.

    அதே போல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த வர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து ஆயுதங்களை எடுத்து வந்து பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் கழுவி அங்கு பூஜை போட்டு சாமி தரிசனம் செய்து வந்தனர். பக்தர்களுக்கு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    மாலை 5 மணிக்கு மேல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் படகு போட்டு நடைபெறுவது வழக்கம் .அதுவும் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சுமார் 6 ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து இருந்ததால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, அரசம்பா–ளையம்,ஜேடர் பாளையம் தடுப்பணை, ஜேடர்பா–ளையம் பரிசல் துறை, வடகரை–யாத்தூர், கண்டிப்பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல் பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர் மற்றும் பாலப்பட்டி வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் இன்று ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், முளைப்பாரி விடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் காவிரி ஆற்றுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே வழிபட்டனர்.

    மேலும் காவிரி ஆற்றுக்கு செல்ல தடை விதித்திருப்பது தெரியாத பலர் காவிரி ஆற்றுக்கு சென்றபோது அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் காவேரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

    காவிரி ஆற்று பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி,கலையரசன் தலைமையில், காவல் ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அந்தந்த பகுதிகளில் காவிரி ஆற்றின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×