search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி படகு இல்லத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்:
    X

    ஊட்டி படகு இல்லத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்:

    • சுற்றுலா அமைச்சர் நேரில் ஆய்வு
    • படகு இல்லத்தை சுற்றிலும் தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா்போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன

    ஊட்டி,

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன் நேரடியாக ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே இங்குள்ள சுற்றுலாத் தலங்களை பயணிகள் மேலும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு வளா்ச்சிப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடமாக படகு இல்லம் உள்ளது. எனவே அங்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் பல்வேறு பொழுதுபோக்கு சாகச சுற்றுலாவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக தற்போது படகு இல்லத்தை சுற்றி உள்ள பகுதியில் மாபெரும் ஊஞ்சல், தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா், குடில்கள், மர வீடு, வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் குணேஸ்வரன், உதவி செயற்பொறியாளா் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளா் சாம்சன் கனகராஜ், உதவி சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×