என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடன் கட்ட முடியாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை- வங்கி மேலாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்
- தனியார் நிதி நிறுவன மேலாளர் 3 நாட்களாக வீட்டிற்கு வந்து கடன் தொகை கட்டச் சொல்லி கேட்டுள்ளார்.
- உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் அய்யந்துரை (30). இவர் சொந்தமாக தறி தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சினேகா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று . அர்ஜுன் (3) ஜாஸ்மிகா (4)ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தறித்தொழிலில் நலிவடைந்த காரணத்தால் இளம்பிள்ளை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் தொழில் நடத்த 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
73 மாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையை மாதம் தவறாமல் கட்டி வந்த நிலையில் 19-வது தவணைத் தொகை கட்டுவதற்கு காலதாமதம் ஆனதால் தனியார் நிதி நிறுவன மேலாளர் 3 நாட்களாக வீட்டிற்கு வந்து கடன் தொகை கட்டச் சொல்லி கேட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பணம் கட்ட சொல்லி கேட்டதால் மனம் உடைந்த அய்யந்துரை நேற்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது மனைவி சினேகா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கடன் தொகை கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்த மேலாளர் மீது வழக்கு பதிவு வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உறவினர் அய்யனார் என்பவர் கூறுகையில், அய்யந்துரை தனது சொந்த தொழிலுக்காக தனியார் வங்கியில் 4 லட்ச ரூபாய் பணம் பெற்று தொடர்ந்து கட்டி வந்த நிலையில் 19-வது தவணை பணம் கட்டுவதற்கான காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கி மேலாளர் அய்யந்துரையை பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வங்கி மேலாளரின் தொந்தரவு காரணமாகவே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.
எனவே மன உளைச்சலை ஏற்படுத்திய மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என கூறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.






