search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் பால் பண்ணையில் பால் வினியோகம் தாமதம்- அதிகாரி சஸ்பெண்டு
    X

    அம்பத்தூர் பால் பண்ணையில் பால் வினியோகம் தாமதம்- அதிகாரி சஸ்பெண்டு

    • கடந்த 3 நாட்களாக அம்பத்தூர் பண்ணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை.
    • பால் பண்ணையில் வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன.

    சென்னை:

    சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் வினியோகத்தில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டு பால் சப்ளை பாதிக்கப்பட்டு வருகிறது.

    வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பால் குறைந்ததாலும் எந்திரம் பழுதின் காரணமாகவும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 3 நாட்களாக அம்பத்தூர் பண்ணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை.

    லாரிகள் தாமதமாக புறப்படுவதால் பால் முகவர்கள் மற்றும் கடைகளுக்கு பால் தாமதமாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக பால் சப்ளை பாதித்தது.

    மாதாந்திர அட்டைதாரர்கள் மற்றும் மொத்த வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் காலை 6.30 மணிவரை வெளியே செல்லவில்லை. பால் பண்ணையில் வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன.

    இதனால் அண்ணா நகர், முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, வடபழனி, திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மாங்காடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகம் செய்யப்பட வேண்டிய சுமார் 3 லட்சம் லிட்டர் பால் சப்ளை முடங்கியது.

    பால் வினியோகம் சீராக இல்லாமல் பல்வேறு பகுதிகளுக்கு தாமதமாக சென்றதால் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் சென்னை அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் வினியோகத்தில் சற்று தாமதமானதின் எதிரொலியாக தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×