தொடர் விடுமுறை - நீலகிரி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.ஊட்டி அருகே தொட்டபெட்டா மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.
தொட்டா பெட்டா சிகரத்தை ரசிக்க திரண்ட சுற்றுலாபயணிகள்.
தொட்டா பெட்டா சிகரத்தை ரசிக்க திரண்ட சுற்றுலாபயணிகள்.
Published on

ஊட்டி:

தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் நிலவும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் தொடர் விடுமுறை வேறு சேர்ந்து கொள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குழந்தைகள் தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், கேர்ன்ஹில் வனம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

ஊட்டி - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரத்தில் வழக்கத்தை விட இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. இங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் காட்சி கோபுரங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். மலை சிகரம் மற்றும் பாறைகளில் நின்றபடி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் நீலகிரியில் விளைந்த பழங்கள், மலைக்காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதிக வாகனங்கள் சென்று வந்ததில் சிகரத்திற்கு செல்ல கூடிய சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஊட்டி அருகே தொட்டபெட்டா மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. ஒரு நபருக்கு ரூ.10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் நவீன தொலைநோக்கிகள் மூலம் குன்னூர் நகரம், வெலிங்டன், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, ஊட்டி நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை, முக்கூர்த்தி அணை உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com