

குனியமுத்தூர்:
கோவை கோவைப்புதூர், மதுக்கரை, குனியமுத்தூர் பகுதிகளில்யில் கடந்த சில வாரங்களாகவே சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. இந்த சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை அந்த பகுதியில் உள்ள கல்லூரிக்குள் புகுந்து நாயை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.
உடனே குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரியக் கூடிய புலியை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வனத்துறையினர் அந்த பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். ஆனாலும் சிறுத்தை இதுவரை பிடிபடவில்லை.
பி.கே.புதூர் பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒருவர் இன்று காலை குடோனை திறப்பதற்காக வந்தார். குடோனை திறந்தபோது உள்ளே இருந்து உருமல் சத்தம் வந்தது.
இதனால் பயந்துபோன அவர் ஏதோ விலங்கு இருக்கிறது என்பதை உணர்ந்தார். ஒருவேளை இந்த பகுதியில் சுற்றிதிரியும் சிறுத்தை தான் உள்ளே இருக்கலாம் என நினைத்த அந்த நபர் உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது குடோனுக்குள் சிறுத்தை இருப்பது உறுதியானது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து குடோனுக்குள் இருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.