

கோவை:
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் அந்தோணி ராஜேஷ். ஐ.டி ஊழியர். இவரது செல்போன் எண்ணுக்கு வங்கி கணக்கு முடக்கப்படாமல் இருக்க பான் கார்டு விவரத்தை அப்டேட் செய்யும்படி ஒரு லிங்க வந்தது. அதில் சென்று அந்தோணி ராஜேஷ் தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டார்.
பின்னர் ஓ.டி.பி எண்ணை பகிர்ந்தவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.25 லட்சம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணி ராஜேஷ் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா(71). இவர் சில நாட்களுக்கு முன்பு நியூ சித்தாபுதூரில் உள்ள வங்கி ஏ.டி.எம்-மிற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை கணபதி கிளை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டார்.
மேலும் பணம் எடுக்க உதவி செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து சுப்பையா அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரகசிய எண்ணை தெரிவித்தார். தொடர்ந்து அந்த நபர் சுப்பையா சொன்ன தொகையை எடுத்து கொடுத்துவிட்டு ஏ.டி.எம்-கார்டை கொடுத்து சென்றார்.
பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் சுப்பையா பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம் கார்டு செயல்படவில்லை. இதனையடுத்து அவரது வங்கி நிர்வாகத்தை அணுகியபோது அவரது கணக்கில் இருந்து மர்மநபர் ரூ.2,08,770 எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வங்கி ஊழியர் என ஏ.டி.எம் சென்டரில் தன்னை அறிமுகப்படுத்திய நபர் முதியவரின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை பெற்ற பின்னர் போலி ஏ.டி.எம் கார்டை அவரிடம் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து சுப்பையா மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி நபரை தேடி வருகின்றனர்.
கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்தவர் சம்பத்குமார்(29). சம்பவத்தன்று இவரது செல்போனில் அழைத்து பேசிய நபர், தான் வங்கி ஊழியர் எனவும், உங்களுக்கு கிரெடிட் கார்டு தொகையை அதிகப்படுத்தி தருவதாகவும், உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி எண்ணை கூறும்படி தெரிவித்தார்.
அவர் ஓ.டி.பி தெரிவித்தவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் பறிபோனது. இது குறித்து சம்பத்குமார் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை மாநகரில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 8 வழக்குகள் பதிவாகி உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இது போன்ற மோசடி நபர்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.
எனவே பொதுமக்கள் தங்கள் செல்போன் எண், மற்றும் இ-மெயிலுக்கு வரும் போலியான குறுந்தகவலை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.