

கோவை:
ஆனைமலை உப்பாற்றங் கரையில் சயன நிலையில் இருந்து அருள்பாலித்துவரும் மாசாணியம்மனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் உள் பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா தை அமாவாசை நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி தை அமா வாசை நாளான நாளை செவ் வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு கொடியேற்றத் துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து 18 நாட்களுக்கு காலை மாலையில் அம் மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடை பெறுகிறது.
ஆனைமலை ஆழியாற்றங் கரையில் உள்ள மயானத்தில் வருகிற 14&ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. 15-ந் தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா, ஆகியவை நடக்கிறது.
இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. மறுநாள் 17-ந் தேதி காலை 7.30 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.18-ந் தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 19-ந் தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ் வாணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றுவதற்கு மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வருவதற்கு நேற்று முன்தினம் மாலை சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டிற்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து சுமார் 70அடி நீளமுள்ள மூங்கில் கம்பை வெட்டி எடுத்து வந்தனர். பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் வைத்து மூங்கில் கம்பத்துக்கு புடவை கட்டி, சந்தனம், குங்குமம், வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து செண்டை மேளம் முழங்க சுமார் 16கிலோ மீட்டர் நடந்தே பக்தர்கள் தோளில் வைத்து மூங்கில் கம்பத்தை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.