

கோவை:
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் இந்தி தெரிந்த அலுவலர்களே பணியில் இருப்பதாகவும், தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தியும், சி.ஐ.டி.யு சார்பில், பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகையில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
மத்திய அரசு நிறுவனங்களான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வங்கி, ெரயில்வே போன்ற அலுவலகங்களில் இந்தி தெரிந்தவர்களையே மத்திய அரசு பணியில், நியமிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் அந்தந்த அலுவலகங்களில் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு சேவைகளை பெருவதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு தமிழகத்தில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.