கோவையில் நடு ரோட்டில் இளம் பெண் மீது தாக்குதல்

கோவை சரவணம்பட்டியில் இளம்பெண்ணை ஒரு கும்பல் தாக்கியது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை, 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் சக்திவேல் ( வயது 21). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்தார். 

பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அருப்புக் கோட்டையைச் சேர்ந்த  தனது நண்பர்கள் முருகமணி ,கணேஷ், சந்துரு, கமலேஷ் ஆகியோருடன் சேர்ந்து வேலை தேடி வந்தார். 

இந்நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு 10 மணி அளவில் சக்திவேல் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி- துடியலூர் சாலையில் உள்ள மெடிக்கல்  கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றார். 

அப்போது அங்கு ஒரு இளம் பெண்ணை 3 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி அவரை கைகளால் தாக்கிக் கொண்டிருந்தனர்.  அந்த இளம்பெண் அழுதபடி இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேலும் அவரது நண்பர்களும் அந்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்களை தட்டி கேட்டனர். 

அப்போது அந்த வாலிபர்கள் மது போதையில் இருந்தனர். தொடர்ந்து சக்திவேலும் அவரது நண்பர்களும் சத்தம் போடவே அந்த இளம்பெண்ணை விட்டுவிட்டு வாலிபர்கள் அங்கிருந்து  தப்பிச் சென்று விட்டனர். சம்பவத்தன்று இரவு சக்திவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது ஏற்கனவே சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மேலும் 4 பேரை அழைத்துக்கொண்டு வந்து சக்திவேலை அடையாளம் காட்டினர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில்  அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து சக்திவேலை வெட்ட முயன்றனர். அப்போது அவர் தடுக்க முயன்றார். 

அப்போது தலை மற்றும் வலது கை , தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டுக்காயம் ஏற்பட்டு சக்திவேல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவர் உடன் வந்திருந்த முருகமணி, கணேஷ் ஆகியோர் தடுக்க முயன்ற போது அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 

இதில் அவர்களுக்கு கைகள் மற்றும் முதுகில் வெட்டு விழுந்தது. அப்போது அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. பின்னர் அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

 இந்த தகவல் கிடைத்ததும்  சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரிவாள் வெட்டு மற்றும் கத்தி குத்தில் காயம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில்   சேர்த்தனர்.  பின்னர் பலத்த காயமடைந்த முருகமணி, கணேஷ் ஆகியோரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை அரிவாளால் வெட்டிய ஏழு பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com