கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் தூக்கு கயிறுடன் மனு அளிக்க வந்த ஆட்டோ டிரைவர்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
ஆட்டோ டிரைவர்
ஆட்டோ டிரைவர்
Published on

கோவை: 

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்தனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியை  சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். ஆட்டோ டிரைவர். இவர்  கலெக்டர் அலுவலகத்தில்  கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக் கொண்டு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:&

 நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது பாட்டிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ஒருவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ 1.50 லட்சம் கடன் வாங்கி அதற்காக மாதம் ரூ.1500 வட்டி கட்டி வந்தேன். 

இதுவரை ரூ.85 ஆயிரம் செலுத்தி உள்ளேன். தற்போது அந்த பத்திரத்தை திருப்பி கேட்டால், அவர் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம்  செலுத்தி விட்டு பெற்று கொள் என கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் இது குறித்து கேட்டோம். அதற்கு அவர் தகாத வார்த்தைகளால் எங்களது குடும்பத்தை திட்டி விரட்டி விட்டார். இதுகுறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மீண்டும் ஒரு முறை மனு அளித்துள்ளோம். இந்த மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கோவை மாவட்ட என்.டி.சி ஆலை தொழிலாளர்கள் அளித்த மனுவில், கடந்த 2020&-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காலத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆலை நிர்வாகம் ஆலையை மூடி விட்டது. அதற்கு பிறகு தற்போது வரை ஆலை திறக்கப்படவில்லை.

 தற்போது பாதி சம்பளம் மட்டுமே தருகிறார்கள். இதை வைத்து குடும்பம் நடத்த முடியவில்லை. ஆலையை திறக்க தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே  இந்த மனுவை பரிசீலனை செய்து ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:&மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 150 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களது ஊதியம் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. 

தற்போது ஒரு குழு மூலமாக அனுப்பபடுகிறது. இதில் எங்கள் ஊதியத்தை எடுப்பது சிரமமாக உள்ளது. எனவே ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும், எங்களுக்கு ரூ.4500 மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. எங்கள் ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

போத்தனூரை சேர்ந்த ராஷ்மி செல்வம் தம்பதியினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:&நாங்கள் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம்  சீட்டு போட்டிருந்தோம். மேலும் தொழில் செய்வதற்காக ரூ.8 லட்சம் கடன் பெற்றோம். அதற்கு மாதாமாதம் வட்டியும் செலுத்தி வந்தோம். கடந்த ஆண்டு மேலும் ரூ.3 லட்சம் கடன் பெற்று, அதற்கு முறையாக வட்டி செலுத்தி வந்தோம்.

பல தவணைகளாக தற்போது வரை அவரிடம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளோம்.  இந்த நிலையில் அந்த பெண் எனது தாயாரிடம் சென்று நீங்கள் இறந்து விட்டால் என்னுடைய பணத்தை யார் தருவார்கள். அதனால் உங்கள் வீட்டு பத்திரத்தை எழுதி கொடுங்கள் என கேட்டு மிரட்டி சென்றார். மேலும் நாங்கள் கொடுத்த தொகை வட்டிக்கு மட்டும் சரியாக உள்ளதாக கூறுகிறார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com