

நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் தண்ணீர் டேங்க் ரோட்டில் உள்ள வீட்டில் போதைப்பொருட்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்குள்ள வீடு ஒன்றில் சோதனை செய்ய உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது போலீஸ் வருவதை பார்த்த வடமாநில வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா பொருட்கள் அந்த வீட்டில் இருந்தது தெரியவந்தது.
போலீசார் அங்கிருந்த குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பேரா ராம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பேராராமை தேடி வருகின்றனர். வாடகை வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.