search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே 32 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் சின்னவேடம்பட்டி ஏரி
    X

    கோவை அருகே 32 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் சின்னவேடம்பட்டி ஏரி

    • பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சரவணம்பட்டி, பச்சாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது

    ரத்தினபுரி,

    கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்து உள்ளது சின்னவேடம்பட்டி. ஒரு காலத்தில் இந்த ஊரை சுற்றி எங்கு பார்த்தாலும் விவசாய நிலங்கள் செழித்து காணப்பட்டன. சோளம், பருத்தி, கீரை வகைகள் உள்பட பல்வேறு பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.

    விவசாயம் செய்து வந்தாலும் அங்கு ஒரு குளம் என்பது கிடையாது. மேலும் மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் போது, வெள்ளம் பெருக்கெடுத்து சங்கனூர் ஓடையில் ஓடும். அப்போது கடும் வெள்ளம் காரணமாக குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

    இதனை தடுக்கவும், விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதே சின்னவேடம் பட்டி ஏரி.

    இந்த ஏரி அமைவதற்கு முதன் முதலாக முன்னெடுப்பு எடுத்தவர் 1959-ம் ஆண்டு ஊராட்சி தலைவராக இருந்த வெங்கிடு. இவர் தான் அப்பகுதி மக்களிடம் பேசி, தங்கள் பகுதியில் ஒரு ஏரியை உருவாக்கும் எண்ணத்தை எடுத்து கூறினார். மக்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து 1962-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த காமராஜரை சந்தித்து கோரிக்ைக மனு கொடுத்தார்.பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், சின்ன வேடம்பட்டியில் ஏரி உருவாக்கியே தீருவேன் என வெங்கிடு முடிவாக இருந்தார்.

    இதற்காக அவர் எம்.எல்.ஏ.தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வும் ஆனார். எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனது முதல் கோரிக்கையாக சட்டமன்றத்தில் சின்ன வேடம்பட்டியில் ஏரி அமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்தார்.

    அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த குழந்தை வேலுவையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தொடர் முயற்சிகள் காரணமாக கடந்த 1984-ம் ஆண்டு சின்னவேடம்பட்டி ஏரி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இதை கேட்டதும் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிதி ஒதுக்கப்பட்டு ஏரி உருவாவதற்கான பணிகள் தொடங்கின. அங்குள்ள விவசாயிகள் பலரும் தங்கள் விவசாய நிலங்களை ஏரி உருவாவதற்காக கொடுத்தனர். பின்னர் 200 ஏக்கர் பரப்பளவில், ஏரி அமைந்தது. ஏரி அமைந்து 2 முறை மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.

    இந்த ஏரிக்கு கணுவாயில் இருந்து பன்னீர்மடை ஆஞ்சநேயர் கோவில், துடியலூர், வெள்ளகிணர் பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டிக்கு தண்ணீர் வருகிறது.

    கடைசியாக 1992-ம் ஆண்டு தண்ணீர் வந்தது. அதன்பிறகு 32 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரவே இல்லை. இதற்கு பல்வேறு காரண ங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள், தண்ணீர் வராததால் ஏரி தூர்வாரப்படாமல் அப்படியே விடப்பட்டு விட்டது.

    இதனை சீரமைக்க வெங்கிடுவின் மகனான ராமமூர்த்தியும் கடந்த 2003-ம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார். ஆனாலும் எதுவும் நடந்தபாடில்லை. பல ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல் அப்படியே கிடந்தது.

    இதனை பாதுகாக்க வேண்டும் என கவுசிகா நீர்க் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பினர் உறுதியேற்றனர். அவர்க ளுடன் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினரும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வாரந்தோறும் ஏரி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியோடு ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

    மேலும் ஏரிக்கு தண்ணீர் வரும் ராஜ வாய்க்காலிலும் தூர்வாரும் பணி மேற்கொ ண்டனர். தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிந்து என்றைக்காவது ஒருநாள் தண்ணீர் வரும் என காத்திருந்தனர். அவர்களின் காத்திரு ப்பும், கனவும் வீண் போகவில்லை. இந்த மாதம் பெய்த 2 மழையால் வெள்ளம் ஆறாய் பெருக்கெடுத்தது.

    புகலிடம் தேடிய மழை வெள்ளத்துக்கு அடைக்கலம் கொடுத்தது சின்னவேடம்பட்டி ஏரி. 16 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 8 அடி தண்ணீர் வந்துள்ளது. ஏரிக்கு தண்ணீர் வந்ததை பார்த்ததும் கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    தொடர்ந்து மழை பெய்தால் ஏரி தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம் பட்டி ஏரி நிரம்பியிருப்பது, விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சின்னவேடம்பட்டி நிரம்பினால், சரவணம்பட்டி, பச்சாபாளையம், அன்னூர், மனியகாரம்பாளையம், கணபதி, அத்திப்பாளையம், பீளமேடு, விளாங்குறிச்சி, காளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயமும் செழிக்கும்.

    Next Story
    ×