search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிப்.23-ந்தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிப்.23-ந்தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

    • தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர்களிடமும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்தில் தயார் நிலையில் உள்ளது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்துக்கும் கடந்த வாரம் தேர்தல் ஆணையர்கள் வந்து வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர். மேலும் பாராளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எவ்வளவு தேவைப்படுகிறது என்கிற விவரங்களையும் கேட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக வரும் அவர் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது அவர், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கருத்து கேட்க உள்ளார். அவர்களிடம் கருத்து கேட்டு தேர்தல் தேதியை முடிவு செய்ய உள்ளார்.

    தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்தலாமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து கேட்கிறார்.

    மேலும் தேர்தல் சம்பந்தமான பணிகள் குறித்தும் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எத்தனை உள்ளன? துணை ராணுவப்படை பாதுகாப்பு எவ்வளவு தேவைப்படும்? பாதுகாப்பு பணிக்கு வெளிமாநில போலீசார் எவ்வளவு தேவை என்பது போன்ற விவரங்களையும் கேட்டறிகிறார். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்துகிறார்.

    மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடமும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்துக்கு எவ்வளவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது? இப்போது கைவசம் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் உள்ளது? இன்னும் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் தேவைப்படும் என்கிற விவரங்களையும் கேட்டு விரிவான அறிக்கையாக பெறுகிறார். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர்களிடமும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

    ஏற்கெனவே மேற்கு வங்காளம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வருகிற 23-ந்தேதி தமிழ்நாட்டுக்கு வந்து பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இருப்பது முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    மேலும் சில மாநிலங்களுக்கும் அவர் சென்று பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு அவர் பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவிப்பார்.

    Next Story
    ×