search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே காட்டுப் பன்றிகள் அட்டகாசத்தால் வாழைகள் நாசம்
    X

    நாசமான வாழைகளை படத்தில் காணலாம்.

    களக்காடு அருகே காட்டுப் பன்றிகள் அட்டகாசத்தால் வாழைகள் நாசம்

    • களக்காடு பம்பன்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
    • பன்றிகள் அட்டகாசத்தால் 400-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலவடகரை பம்பன்குளம் பத்துக்காட்டில் கடந்த 2 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் கூட்டம் பம்பன்குளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

    இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழைகளை நாசம் செய்தன. பன்றிகள் அட்டகாசத்தால் 400க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

    இவைகள் 3 மாதமான ஏத்தன் ரக வாழைகள் ஆகும். பன்றிகள் சேதப்படுத்திய வாழைகள் மேலவடகரையை சேர்ந்த முருகபெருமாள் (40), அய்யா (40), பண்டாரம் (45), பாண்டி (30), நம்பிநாராயணன் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

    வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு பன்றிகளை விரட்டவும், பன்றிகளால் நாசமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஏற்கனவே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வரும் வேளையில் காட்டு பன்றிகளும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    களக்காடு மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பெரும் போராட்டமே நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.

    வனத்துறையினரிடம் மனு கொடுத்தும், அவர்கள் இழப்பீடும் வழங்காமல், வனவிலங்குகளை விரட்டவும் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருந்து வருவதாக களக்காடு பா.ஜனதா பிரமுகர் சேர்மன்துரை புகார் தெரிவித்தார்.

    Next Story
    ×