search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
    X

    மாரத்தான் போட்டியில் இலக்கை நோக்கி ஆர்வமுடன் ஓடும் மாணவிகள்.

    விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    • சிறுவர்-சிறுமிகள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    போட்டியை குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாத்தப்பன், டாக்டர் சிங்காரவேலு, துணை நீதிபதி டாக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.

    இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 20 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு வல்லம் சென்று மீண்டும் மைதானம் வரையும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கு தனித்தனியாக 5 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவ கல்லூரி முதல் கேட் வரை சென்று மீண்டும் மைதானம் வரையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்படி போட்டியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் மாரத்தான் ஓடினர்.

    முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பரிசினை மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், நெல்லை ஜீவா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியாக முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.10 பத்தாயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இது தவிர 20 நபர்களுக்கு ரூ.500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    இதுபோல் சிறுவர் -சிறுமிகள் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ,கோப்பை வழங்கப்பட்டது. மேலும் மாணவிகள் தலா 3 பேர் என 6 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனுவர்ஷன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.

    Next Story
    ×