search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மதிவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பிரசித்தி பெற்ற, மிகவும் பழமை வாய்ந்த அத்தனூர் அம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இதை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பிரசித்தி பெற்ற, மிகவும் பழமை வாய்ந்த அத்தனூர் அம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராஜ கோபுரம், கோவில் சிற்பங்கள் புதிதாக செய்யப்பட்டன.

    இக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி விக்னேஸ்வரா பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. 8-ந் தேதி பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 9-ந் தேதி மகாலட்சுமி, சரஸ்வதி ஹோமம், கலசாபிஷேகம், விநாயகர் பூஜை நடந்தது. 10-ந் தேதி யாக பூஜை, தீபாரதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்கல இசை, திருமுறை பாராயணம் நடந்தது. இதைத் தொடர்ந்து விமானம் கண் திறப்பு, விநாயகர், ஸ்ரீ அத்தனூர் அம்மன், ஸ்ரீ அத்தாயி அம்மன் மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், பரிவார தெய்வங்கள் அஷ்ட மருந்து சாத்துதல் நடந்தது. மாலையில் மண்டபார்ச்சனை, யாக பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழா

    இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, ரட்சா பந்தனம், புண்யாகம், நாடி சந்தானம், வஸ்திர சமர்ப்பணம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6.30 மணிக்கு மேல் ராஜகோபுரம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தாயி அம்மன், உறும்பிக்காரன், ஸ்ரீ முத்து முனியப்பன், ஸ்ரீ மகாமுனியப்பன், ஸ்ரீ ராஜ முனியப்பன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ ஆதிமூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மேளதாளத்துடன், வாணவேடிக்கை முழங்க கோலாகலமாக நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகம், தச தரிசனம், அலங்காரம், உச்சி காலை பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    அமைச்சர்கள், நீதிபதி பங்கேற்பு

    கும்பாபிஷேக விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எம்.பி.க்கள் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், பொன்னுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கரூர், விழுப்புரம், ஈரோடு, கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருப்பணி சங்கம் மற்றும் விழா குழுவினர், கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் வெண்ணந்தூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×