search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்
    X

    பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்

    • புதியபேருந்து நிலையம் கட்ட ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு
    • தற்காலிக பேருந்து நிலையம் குறித்த அறிவிப்பு இல்லை

    அரியலூர்,

    தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்று. இருப்பினும் தமிழக அரசுக்கு கனிம வளங்களின் மூலமாகவும், விவசாய விளைபொருட்கள் மூலமாகவும் வருமானத்தை அள்ளித்தருகின்ற மாவட்டமாக திகழ்கிறது. சுண்ணாம்பு கற்களை கொண்ட பூமியான அரியலூரில் பிரபல சிமெண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட அரியலூர் மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அரியலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஆயிரம் மக்கள்தொகையை கொண்ட இந்த அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    அதன் பிறகு 2 முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு 47 ஆண்டுகள் ஆனதால் கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்தன. பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கியது. இந்த பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்து தருமாறு நகராட்சி நிர்வாகம் பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், நேரில் வந்து கூறியும் யாரும் கடைகளை காலி செய்யவில்லை. இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின. இடிந்துவிடும் நிலையில் உள்ள சமுதாய கூடத்தை பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடிக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து கட்டுமான பணிகளுக்காக இரும்பு கம்பிகள், சிமெண்டு மூட்டைகள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.ஆனால் தற்காலிக பஸ் நிலையம் எந்த இடத்தில் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், மாணவ-மாணவிகள் தாங்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் எங்கிருந்து செல்வது, பஸ்கள் எங்கு நிற்கும் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். மேலும் பஸ் நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் மீண்டும் இதே பஸ் நிலையத்திற்கே பஸ்கள் வந்து சென்றால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைவில் தற்காலிக பஸ் நிலையம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், புதிய பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×