search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை வழக்கில்  9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது: திடுக்கிடும் தகவல்கள்
    X

    கைது செய்யப்பட்ட கணேஷ்.

    கொலை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது: திடுக்கிடும் தகவல்கள்

    • கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் அருளரசு (வயது 48). இவருக்கும் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கணேஷ் (வயது 39) என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2014 -ம் ஆண்டு கணேஷ், அருளரசை வெட்டி கொலை செய்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். பின்னர் கணேஷ் கடந்த 2015 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளியில் வந்த கணேஷ் அதன் பிறகு தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவான கணேஷை தேடி வந்தனர். கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருவதாக நீதிமன்றத்தில் கணேஷ் உறவினர்கள் வழக்கு தொடர்ந்து தேவையின்றி விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவு பெற்றனர். இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து கணேஷை தேடி வந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக எங்கு சென்றார் என தெரியாத நிலையில் மீண்டும் அவர்களது உறவினரிடம் கேட்டபோது கணேஷ் இறந்துவிட்டதாக தகவலும் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    இதில் கணேஷ் உறவினர்கள் திருமண பத்திரிக்கையில் கணேஷ் பெயர் இடம் பெற்றது. ஆனால் அதில் இறந்தது போல் எந்த தகவலும் பதிவு செய்யவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து கணேஷ் உறவினர்களின் போன் நம்பரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இதில் ஒரு நம்பருக்கு அடிக்கடி ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக குறிப்பிட்ட நம்பரை கண்காணிக்க தொடங்கினர். மேலும் அது யாருடைய நம்பர்? அவர் யார்? என்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அந்த நம்பரை பயன்படுத்தி வந்தது கணேஷ் என்பது உறுதியாக தெரிந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் ரகசியமாக கடந்த6 மாதமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்றிருந்ததும், அதன் மூலமாக அந்த பகுதியில் வசித்து வந்ததும் போலீசாருக்கு உறுதியாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேஷ் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொலை வழக்கு கைதியான கணேஷை போலீசார் பிடித்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினர்.

    Next Story
    ×