search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி- ரூ.600 கோடி வசூலித்து கொடுத்த முக்கிய நிர்வாகி கைது
    X

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி- ரூ.600 கோடி வசூலித்து கொடுத்த முக்கிய நிர்வாகி கைது

    • ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் 1 லட்சத்து 9255 பேரிடம் ரூ.2438 கோடியை சுருட்டியது.
    • ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    நிதிநிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து வருவது வாடிக்கையாகி இருக்கிறது.

    அந்த வகையில் ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் 1 லட்சத்து 9255 பேரிடம் ரூ.2438 கோடியை சுருட்டியது.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜா செந்தாமரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ராஜா செந்தாமரை முக்கியமான முகவராக செயல்பட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.600 கோடி வரையில் அவர் வசூலித்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டைகள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சந்திரகாந்தின் 3 கோடி ரூபாய் வங்கி கணக்கை முடக்கியதாகவும் அவரிடம் ஆருத்ரா நிறுவனத்தின் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×