ஒடிசாவில் உயிரிழந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி தாய் மனு

உடலை தமிழகம் கொண்டு வர அரசின் உதவியை கேட்டு மனு.கண்ணீர் மல்க மனு அளித்துவிட்டு தாய் கதறி அழுதார்.
ஒடிசாவில் உயிரிழந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி தாய் மனு
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பாப்பக்காள்(65). இவர்களது மகன் தேவராஜ். பழனிச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் தேவராஜ் கூலி வேலை செய்து தாயாரை காப்பாற்றி வந்தார்.

இந்நிலையில் தேவராஜின் உறவினர்கள் கோபி, சத்தி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் மூலமாக சம்பவத்தன்று காலை காசியாத்திரை சென்றுள்ளனர்.

இந்நிலையில் தேவராஜ் உட்பட அனைவரும் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளனர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் தேவராஜூக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனே அருகில் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பூரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே தேவராஜ் உயிரிழந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து தேவராஜூவின் தாயார் கதறி துடித்து, மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர முயன்ற போது, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வாடகையாக கேட்டு உள்ளனர்.

வறுமையில் வாழும் பாப்பக்காவினால் மகனின் உடலை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மகனின் உடலை தமிழகம் கொண்டு வர அரசின் உதவியை கேட்டு கோபி ஆர்.டி.ஓ. கண்ணப்பனிடம் கண்ணீர் மல்க மனு அளித்துவிட்டு கதறி அழுதார்.

கணவரை இழந்த நிலையில் மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த ஏழை தாயினால், மகனின் உடலை கொண்டு வர முடியாமல் தவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com