search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி அருகே வனத்திற்குள் இறந்து கிடந்த குட்டி யானை
    X

    வடவள்ளி அருகே வனத்திற்குள் இறந்து கிடந்த குட்டி யானை

    • குட்டி யானையின் உடல் அருகே செல்லும் போது, தாய் யானை வர வாய்ப்பு இருப்பதால், வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையின் அருகில் செல்லவில்லை.
    • உடல் கிடக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் தாய் யானை பிளிறி கொண்டே இருக்கிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனசரகத்திற்கு–ட்பட்டது அட்டுக்கல் பகுதி. இந்த பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இங்குள்ள யானைகள் யானைமடுவு, அட்டுக்கல் ஆதிவாசி கிராமம், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக இருந்தது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் வாகனங்களில் ரோந்து செல்கின்றனர்.

    நேற்று மாலை வனத்துறை ஊழியர்கள், குப்பேபாளையம் பகுதியில் இருந்து அட்டுக்கல் வழியாக யானைமடுவு பகுதியை நோக்கி சென்றனர். அப்போது அட்டுக்கல் வனத்தில் இருந்து 50 மீட்டரில் குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது.

    மேலும் யானை உடலின் சற்று தொலைவில் அதன் தாய் யானை பிளிறி கொண்டே இருந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது இறந்து கிடந்தது ஒரு மாதமே ஆன குட்டி ஆண்யானை என்பது தெரியவந்தது. இதையடுத்து யானை குட்டியை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். ஆனால் உடல் கிடக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் தாய் யானை பிளிறி கொண்டே இருக்கிறது.

    மேலும் குட்டி யானையின் உடல் அருகே செல்லும் போது, தாய் யானை வர வாய்ப்பு இருப்பதால், வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையின் அருகில் செல்லவில்லை.

    சற்று தள்ளி நின்றபடியே இரவு முழுவதும் குட்டி யானையின் உடலை கண்காணித்தனர். இன்று காலை சத்தியமங்கலம் கால்நடை உதவி டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவகுழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    பின்னர் வனத்துறையினரும், கால்நடை டாக்டர்களும் இணைந்து, குட்டி யானையின் உடல் அருகே சுற்றி திரியும் தாய் யானையை அங்கிருந்து வெளியேற்றி விட்டு, குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×