மதுரையில் ஒயின்ஷாப் பார் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

மது போதையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஒயின்ஷாப் பார் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
Published on

மதுரை:

மதுரை விரகனூர் அருகே கல்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் நவநீதன், கிளி ஆனந்த். இவர்கள் நேற்று இரவு அங்குள்ள ஒயின்ஷாப் பார் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் நவநீதன் மற்றும் கிளி ஆனந்த் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்த நவநீதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் கிளி ஆனந்த் கத்திக்குத்து காயங்களுடன் கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனிடையே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

ரத்த காயத்துடன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கிளி ஆனந்த்தை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சு மூலமாக மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட நவநீதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாக உறவினர்களுக்குள் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அதே பகுதிைய சேர்ந்த மணிமாறன், திருப்பதி ஆகிய 2 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் மது போதையில் வாலிபர் கொலை செய்யப்பட்டதோடு மற்றொரு இளைஞர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com