search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-ந்தேதி, என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி - அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
    X

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-ந்தேதி, என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி - அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

    • இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
    • மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழா தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு குறுக்குச்சாலையில் உள்ள கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது.

    இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தொழில்நுட்ப கல்விக்கு தோள்கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத்தலைவர், திராவிட மாடலும், திறன் மிக்க கல்வியும், தெற்குச் சூரியன், கலைஞரும், தமிழும் ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

    மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியிலும், மண்டல அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவிலும் நடைபெறும் பேச்சுப் போட்டியிலும் பங்கு பெறலாம். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

    இந்நிகழ்ச்சியானது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் மாவட்ட, மாநகர பொறியாளரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. மாநகர பொறியாளரணி அமைப்பாளர் ரூபன் நன்றி கூறுகிறார்.

    போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் (நான்) பரிசுகள் வழங்க உள்ளார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பொறியாளரணி துணை செயலாளர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

    எனவே இந்நிகழ்ச்சியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள் போட்டியில் பங்கு கொள்ள அழைக்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×