search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சான்றட்டை, விபர அட்டை பொருத்திய நெல் விதை உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் மட்டுமே வாங்க வேண்டும் - நெல்லை துணை இயக்குனர் அறிவுறுத்தல்
    X

    சான்றட்டை, விபர அட்டை பொருத்திய நெல் விதை உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் மட்டுமே வாங்க வேண்டும் - நெல்லை துணை இயக்குனர் அறிவுறுத்தல்

    • நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெற் பயிர் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர்.
    • விவசாயிகள் விதை வாங்கும்போது சான்றட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெற் பயிர் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர். நெல் விதை வாங்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சான்றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய நெல் விதைகளை விதை உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். சான்றட்டையில் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையினால் தர உத்திரவாத விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார நிலை விதைகளின் சான்றட்டை வெண்மை நிறத்திலும், சான்று நிலை விதைகளின் சான்றட்டை நீல நிறத்திலும் இருக்கும். சான்றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்குவது சிறந்தது.

    விவசாயிகள் விதை வாங்கும்போது சான்றட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். வாங்கும் விதைகளுக்கு விற்பனையாளரிடமிருந்து பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விபரம் குறிப்பிட்ட விற்பனைப் பட்டியலை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தனியார் நிறுவனங்களின் நெல் விதைகளை வாங்கும் விவசாயிகள் விதை மூட்டைகளில் உள்ள உண்மை நிலை விபர அட்டையில் குறிப்பிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×