அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை கலைக்க மெர்சல் டிக்கெட் வழங்கிய தினகரன் அணியினர்

கூடலூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை கலைக்க இலவசமாக ‘மெர்சல்’ பட டிக்கெட்டை தினகரன் அணியினர் வினியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தியேட்டர் முன்பு குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்
தியேட்டர் முன்பு குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூரில் பழைய பேருந்து திடல் பகுதியில் நேற்று மாலை அ.தி.மு.க.வின் 46-வது ஆண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டத்திற்கு ஓ.பி.எஸ்.- எடப்பாடி அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூடலூர் பகுதியில் தினகரன் அணியினரும் கணிசமான அளவில் உள்ளனர். அவர்கள் பொதுக் கூட்டத்தை கலைப்பதற்காக மாற்று ஏற்பாடு செய்தனர்.

அதன்படி முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமாருக்கு சொந்தமான தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்பட்டிருந்தது. இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளார் ஆவார். எனவே அனைத்து பொதுமக்களுக்கும் மாலை 6 மணி காட்சி டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏராளமான ஆண்கள், பெண்கள் தியேட்டர் முன்பு குவிந்தனர். ஒருசிலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். பொதுக்கூட்டத்தில் சேர்கள் காலியாக இருந்ததால் நிர்வாகிகளிடம் பொதுமக்களை கூட்டி வரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கூட்டத்திற்கு பொதுமக்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் பல இருக்கைகள் காலியாகவே இருந்தது.

பொதுக்கூட்டமும் திரைப்படமும் ஒரே நேரத்தில் நடந்தது. பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com