18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கவிழும்-தினகரன் பேச்சு

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கவிழும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #Dinakaran
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கவிழும்-தினகரன் பேச்சு
Published on

தஞ்சாவூர்:

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயணத்தை தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தொடங்கினர். நேற்று அவர் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை தஞ்சை தொகுதியில் தொடங்கினார்.

தஞ்சை புன்னைநல்லூர், கரந்தை, மருங்குளம், நாஞ்சிக்கோட்டை அண்ணாநகர் ஆகிய இடங்களில் தினகரன் பேசினார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

கர்நாடக அரசு முறையாக தண்ணீர் வழங்காத காரணத்தாலும், மழை பெய்தாலும் டெல்டா பகுதி விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த திட்டங்களால் வருங்காலத்தில் விவசாயம் இல்லாமல் போய்விடும். கதிராமங்கலம், நெடுவாசல், மன்னார்குடி போன்ற இடங்களில் எல்லாம் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை, விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த வரை இந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

தமிழகத்தில் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களை கேட்காமலேயே சம்பளத்தை ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தி உள்ளனர். காரணம், எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக. அவர்கள் இருந்தால் தான் இந்த ஆட்சி தொடரும்.

ஜெயலலிதாவின் ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என போராடிய 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை நீக்கம் செய்துள்ளனர். எந்த நேரமும் இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வரும். எனவே இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

தமிழகத்திற்கு கெட்ட பெயரை இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகிறார்கள். இந்திய துணை கண்டத்தில் ஊழலுக்கு பெயர் போன அரசாங்கமாக தமிழக அரசு திகழ்கிறது. வருங்காலத்தில் இந்த அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டு பல வழக்குகளில் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

பணம் இருக்கிறது என்பதால் மக்களை விலைக்கு வாங்க முடியாது. 234 தொகுதியிலும் டி.டி.வி. தினகரன் தான் வேட்பாளர் என மக்கள் கருத தொடங்கி விட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுப்போம். எனவே தமிழகத்தில் நல்லாட்சி அமைய ஆதரவு அளியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #Dinakaran #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com