

பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் துணை பொதுச் செயலாளரான தினகரனும் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இருவரையும் அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதன் பின்னர் தினகரன் கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரன் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை பலமுறை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் தான் ஒதுக்கி வைக்கப் பட்டிருப்பது குறித்தும் சசிகலா விடம் தினகரன் முறையிட்டார். கடந்த முறை தினகரன் சசிகலாவை சந்தித்த போது அரசியலில் வேகம் காட்ட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அரசியலில் பொறுமையாக தினகரன் காய் நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று சசிகலாவை மீண்டும் சந்திக்க தினகரன் முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து அவர் பெங்களூர் புறப்பட்டு சென்றார். சசிகலாவை சந்திப்பதற்காக சிறை துறை அதிகாரிகளிடம் தினகரன் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தார்.
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், சசிகலாவுடனான தினகரன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வராததால் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சற்று நேரம் காத்திருந்த தினகரன், சசிகலாவை சந்திக்காமலேயே சென்னை புறப்பட்டார்.