திருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடைக்கு வழங்கப்படும் விஐபி தரிசன திட்டத்திற்கு பக்தர்கள் வரவேற்பு

திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்திய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பக்தர்களிடம் இருந்து வரவேற்பு அதிகரித்துள்ளது.
திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்
Published on

திருமலையில் நடந்த கூட்டத்தில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியிருப்பதாவது:-

பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளில் ஏழுமலையான் கோவில் கட்டி இந்து மதத்தை பரப்ப தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளையை ஏற்படுத்தியது. இந்த அறக்கட்டளை குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்களுக்கு வி.ஐ.பி. தரிசன அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

அதன்படி இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய 89 பேர் நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். அவர்களுடைய வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஸ்ரீவகுளாதேவி ஓய்வறையில் 50 அறைகள் ஒதுக்கப்பட்டன.

அறங்காவலர் குழுவினர் ஆலோசனைப்படி வரும் 3 மாதங்களுக்குள் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்படும்.

திருமலையில் உள்ள கடைகளிலும் அமல்படுத்தப்படும். தேவஸ்தான அலுவலகங்களிலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

திருமலையில் உள்ள தேவஸ்தான அருங்காட்சியம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.30 கோடி முதல் 40 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கான முழு செலவையும் பெங்களூருவை சேர்ந்த மாப் டெக்னாலஜி நிறுவனம் ஏற்றுள்ளது. திருமலையில் பணமில்லா பரிமாற்ற முறை அதிகரித்துள்ளது.

திருமலையில் உள்ள தோட்டங்களை சீரமைக்க ஜி.எம்.ஆர். நிறுவனம் முன்வந்துள்ளது. இன்னும் 20 நாட்களில் ஜி.எம்.ஆர். நிறுவனத்தை சேர்ந்த குழு திருமலைக்கு வந்து பணிகளை தொடங்க உள்ளது என்றார்.

திருப்பதியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com