டெல்லி ஓட்டல் தீ விபத்தில் திருச்சி டாக்டர் பலி - உறவினர்கள் கதறல்

டெல்லி சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் திருச்சியை சேர்ந்த பிரபல டாக்டரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் சங்கரநாராயணன்
டாக்டர் சங்கரநாராயணன்
Published on

திருச்சி:

டெல்லி சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் திருச்சியை சேர்ந்த பிரபல டாக்டரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வயலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சங்கரநாராயணன். இவர் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் மூத்த பல் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். மேலும் ஸ்டெம்செல் சிகிச்சையிலும் புகழ்பெற்று விளங்கி வந்தார்.

இந்த நிலையில் சங்கர நாராயணன் ஸ்டெம்செல் சிகிச்சை உரிமம் பெறுவதற்காகவும், பல் மருத்துவம் குறித்து கருத்தரங்களில் பங்கேற்கவும் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தார்.

அந்த ஓட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தின்போது, அறையில் தூங்கிக்கொண்டிருந்த சங்கர நாராயணன் பலத்த தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். சங்கரநாராயணனின் மரண செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அவரது உடலை பெறுவதற்காக திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இறந்த சங்கரநாராயணன் மருத்துவத்துறை மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல் மருத்துவம் மற்றும் ஸ்டெம்செல் சிகிச்சை குறித்து சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார். அவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். மகள் சென்னையில் பல் மருத்துவம் படித்து வருகிறார்.

டெல்லி ஓட்டல் தீ விபத்தில் டாக்டர் சங்கரநாராயணன் பலியான சம்பவம் நேற்று மாலை வரை அவரது உறவினர்களுக்கு தெரியவில்லை. இரவுதான் தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com