பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்: 11 முன்னாள் எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் 11 முன்னாள் எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எம்.பி.க்கள் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ ஒன்றை கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

2 பத்திரிகையாளர்கள் நடத்திய ரகசிய விசாரணை வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. இது அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து முன்னாள் எம்.பி.க்களான ஒய்.ஜி. மகாஜன் (பா.ஜனதா), சத்திர பால்சிங் லோதா (பா.ஜனதா), அண்ணா சாகேப் எம்.கே.பட்டீல் (பா.ஜனதா), மனோஜ்குமார் (ராஷ்டிரிய ஜனதா தளம்) சந்திர பிரதாப்சிங் (பா.ஜனதா), ராம் சேவாக் சிங் (காங்கிரஸ்), நரேந்திரகுமார் குஷ்வாகா (பகுஜன் சமாஜ்) பாரதீப் காந்தி (பா.ஜனதா) சுரேஷ் சந்தேவ் (பா.ஜனதா), லால் சந்திர கோப் (பகுஜன் சமாஜ்), ராஜா ராம்பாப் (பகுஜன் சமாஜ்) ஆகியோருக்கு எதிராக டெல்லி போலீசார் ஊழல் தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது 11 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் 11 பேரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவதால் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 முன்னாள் எம்.பி.க்கள் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்களைத் தவிர ராம்பாலின் அப்போதைய உதவியாளர் ரவீந்தர் குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். தரகராக செயல்பட்ட விஜய்போகட் இறந்துவிட்டதால் அவருக்கு எதிரான விசாரணை கைவிடப்படுகிறது என்றும் நீதிபதி அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com