புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரசார் கோ‌ஷம்

புதுவை காங்கிரசார் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரசார் கோ‌ஷம்
Published on

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதிநாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அந்த பணிகளை பார்வையிடவும் புதுவையின் பல பகுதிகளுக்கு சென்று வருகிறார்.

இதற்காக புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் உச்சகட்டம் எட்டியுள்ளது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்த விவகாரம் புதுவை காங்கிரசாரை அதிர்ச்சியடைய செய்தது.

அவர்களுக்கு கவர்னர் இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்தது காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கவர்னர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரசார் தொகுதி தோறும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதனால் வார இறுதிநாட்களில் கவர்னர் கிரண்பேடி ஆய்வுக்கு செல்லும்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிள் மூலம் மாணவர்கள் மற்றும் கவர்னர் மாளிகை ஊழியர்களோடு ஊசுட்டேரிக்கு சென்றார். அங்கு ஆய்வு பணிகளை முடித்து விட்டு மீண்டும் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது இந்திராநகர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ.கே.டி.ஆறுமுகம் தலைமையில் காங்கிரசார் வழுதாவூர் சாலையில் காந்தி நகரில் காமராஜர் பிறந்தநாள் விழாவை கொண்டாட திரண்டிருந்தனர்.

அப்போது அவ் வழியே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கவர்னர் கிரண்பேடி வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த காங்கிரசார் கவர்னருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் காங்கிரசாரை அப்பகுதியில் இருந்து நகர விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதைப்பார்த்து கொண்டே கவர்னர் சைக்கிளில் அப்பகுதியை கடந்து சென்றார். கவர்னர் கிரண்பேடிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு புதுவையில் வலுத்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com