பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து- கண்ணையா குமார் மீது பீகார் கோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறியதாக ஜேஎன்யூ பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீது பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #JNUSUFormerpresident #KanhaiyaKumar #BJPFiledCase
பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து- கண்ணையா குமார் மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
Published on

கிஷன்கஞ்ச்:

பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு  துக்க தினமாக கடைப்பிடித்தனர்.

அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ ஆதாரங்களை சி.பி.ஐ. தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதால் கண்ணையா குமார் உட்பட 3 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக ஜேஎன்யூ  பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பீகாரின் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில், பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாநில துணைத்தலைவர் தித்து பட்வால் நேற்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

பெகுசராய் மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக கண்ணையா குமார் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த திங்கள் அன்று அஞ்சுமன் இஸ்லாமியா ஹாலில், கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கண்ணையா குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பேசியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #JNUSUFormerpresident #KanhaiyaKumar #BJPFiledCase  

X

Maalai Malar
www.maalaimalar.com