நீதிபதி கர்ணனை கைது செய்ய தீவிரம்: கொல்கத்தா போலீஸ் சென்னை வருகை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீஸ் தனிப்படையினர் சென்னை வந்தனர்.
நீதிபதி கர்ணனை கைது செய்ய தீவிரம்: கொல்கத்தா போலீஸ் சென்னை வருகை
Published on

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணனுக்கும் சக நீதிபதிகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு நிர்வாக ரீதியாக முதலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அப்போதைய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், தனது பணிகளில் தலையிடுவதாக கர்ணன் குற்றம் சாட்டினார். மேலும் கவுலிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய கமி‌ஷன் விசாரணை நடத்த உத்தரவிடப்போவதாகவும் கூறினார்.

இது தவிர எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்போவதாகவும் தெரிவித்தார். இது சென்னை ஐகோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். இதையடுத்து கர்ணன் சென்னை ஐகோர்ட்டில் இருந்து கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற பிறகும் அவருக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நீடித்தது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் சக நீதிபதிகள் மீது பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். இது தொடர்பாக ஜனவரி 23-ந் தேதி அவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் அவர் 20 நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.


இந்த 20 நீதிபதிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். பிப்ரவரி 8-ந்தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவானது. மார்ச் 10-ந்தேதி கர்ணனுக்கு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதை ஏற்று நீதிபதி கர்ணன் மார்ச் 31-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் அவகாசம் அளித்தது. ஆனால் கர்ணன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனால் நீதிபதி கர்ணனிடம் மனநல பரிசோதனை நடத்தும்படி கடந்த 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் 8 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது. ஆனால் மனநல பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி கர்ணன் திடீரென தனக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்ட 8 நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டார். 8 நீதிபதிகளுக்கும் தலா 5 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாக கூறினார். இது நீதித்துறை வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.எஸ்.சேகர் மற்றும் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று நீதிபதி கர்ணன் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டது. நீதிபதி கர்ணனை உடனே கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

கொல்கத்தா போலீசார் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

நேற்று பகல் 11 மணிக்கு நீதிபதி கர்ணனுக்கு எதிரான இந்த உத்தரவு வெளியானது. ஆனால் அதற்கு முன்பே நேற்று அதிகாலை 4.42 மணிக்கே கர்ணன் கொல்கத்தா வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். கொல்கத்தாவில் நியூ டவுன் பகுதியில் ரோஸ்டேல் காம்ப்ளக்சில் இருந்த அவரை போலீசார் பாதுகாப்புடன் கொல்கத்தா விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

காலை 6.15 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் கர்ணன் சென்னைக்கு புறப்பட்டார். 9 மணிக்கெல்லாம் அவர் சென்னை வந்து சேர்ந்து விட்டார். நேரடியாக அவர் சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வந்து தங்கினார். 3-ம் எண் அறை அவருக்கு கொடுக்கப்பட்டது.

நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

உடனே கொல்கத்தா போலீசார் தங்கள் நடவடிக்கையை தொடங்கினார்கள். நேற்று பகல் 11.40 மணிக்கு கொல்கத்தா போலீஸ் படை ஒன்று கர்ணனின் வீட்டுக்கு சென்றது. வீட்டில் பூட்டு தொங்கியதை பார்த்த பிறகே நீதிபதி கர்ணன் சென்னை வந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதற்கிடையே நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நேற்று மாலை வரை கொல்கத்தா போலீசாருக்கு வந்து சேரவில்லை. இதனால் கொல்கத்தா போலீசார் சென்னை புறப்பட்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்றிரவு அந்த உத்தரவு வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் இன்று காலை சென்னை புறப்பட்டு வந்தனர். இன்று மதியம் அவர்கள் சென்னை வந்தனர்.

முன்னதாக கொல்கத்தா போலீசார், சென்னை போலீசாருடன் தொடர்பு கொண்டு நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உதவி கோரியிருந்தனர். சென்னை போலீசாரும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வரை நீதிபதி கர்ணன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலே தங்கியிருந்தார். நள்ளிரவு அவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியில் புறப்பட்டார். தனது பிரத்யேக பாதுகாவலரை தன்னுடன் வர வேண்டாம் என்று கூறிய அவர் தனியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

முதலில் அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 9 மணியளவில் அவர் காளஹஸ்தி கோவிலுக்கு புறப்பட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையே இன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு சுமார் 25 போலீசார் குவிக்கப்பட்டனர். கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணைக் கமி‌ஷனர் அன்பு, மயிலாப்பூர் துணைக் கமி‌ஷனர் பாலகிருஷ்ணன், திருவல்லிக்கேணி துணைக் கமி‌ஷனர் பெருமாள், திருவல்லிக்கேணி உதவிக் கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், எழும்பூர் உதவிக் கமி‌ஷனர் முத்தழகு ஆகிய உயர் போலீஸ் அதிகாரிகள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு முகாமிட்டுள்ளனர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் 2 வாயில்கள் உள்ளன. அதில் ஒரு வாயில் எப்போதும் பூட்டப்பட்டு இருக்கும். எனவே ஒரு வாசலில் மட்டும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் போலீசார் வெளியாட்கள் யாரையும் விருந்தினர் மாளிகைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

நீதிபதி கர்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நிருபர்களும் குவிந்துள்ளனர். அவர்களில் ஒரு நிருபர், நீதிபதி கர்ணனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com