

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிசிகாந்த் துபே தனது உரையை முடித்து மேடையில் அமர்ந்தபோது, பாஜக தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதனைப் பார்த்த பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தொண்டரை தன் கால்களை கழுவ அனுமதித்தது சரியல்ல என்றும் பலர் கூறினர். பாஜக தலைவர்களின் ஆணவம் உச்சத்தை எட்டியிருப்பதாக காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.