

போபால்:
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
15 ஆண்டுகள் அங்கு ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.
இந்த நிலையில் கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக அவர் ரகசிய சதி திட்டங்களை மேற்கொண்டுள்ளார். கர்நாடகா பாணியில் மத்திய பிரதேசத்திலும் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறிக்க சதி நடக்கிறது.
15 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய பா.ஜ.க. தலைவர்கள் நிறைய பணம் சேர்த்து வைத்துள்ளனர். அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி வருகிறார்கள். ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.35 கோடி வரை தருவதாக ஆசை காட்டுகிறார்கள்.
முதல் தவணையாக ரூ.5 கோடி தரப்படும் என்றும் கமல்நாத் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு மீதம் உள்ள தொகை தரப்படும் என்றும் சொல்லி வருகிறார்கள். மத்திய பிரதேசத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலை கொடுத்து வாங்கப்படும் நிலையில் இல்லை.
கர்நாடகாவில் விலை போன மாதிரி மத்திய பிரதேசத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோடிக்கு மயங்கி விலை போக மாட்டார்கள். நான் சொல்வது பொய் அல்ல.
பாரதிய ஜனதா கட்சியினர் பேரம் பேசியதற்கு என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
இதுகுறித்து பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சிவ ராஜ்சிங்சவுகான் கூறுகையில், “திக்விஜய்சிங் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரியாது. அடிக்கடி இப்படி ஏதாவது உளருவார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்“ என்று கூறியுள்ளார்.