கர்நாடக முதல் மந்திரி மீது பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.க. புகார்

ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், பா.ஜ.க. போன்றவையும் தீவிரவாத இயக்கங்கள்தான் என்று கூறிய கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மீது பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.க.வினர் இன்று புகார் அளித்துள்ளனர். #Siddaramaiah #bjp
கர்நாடக முதல் மந்திரி மீது பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.க. புகார்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகருக்கு வந்த முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களுக்கு கடந்த 10-1-2018 அன்று பேட்டியளித்தார். பா.ஜ.க. பிரமுகர் தீபக் ராவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இயக்கத்தை கர்நாடக அரசு இன்னும் தடை செய்யாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மேற்படி கொலை வழக்கு தொடர்பாக மேலும் சில உண்மையான தகவல்களுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அல்லது எந்த அமைப்பாக இருந்தாலும் சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்குவதை சகித்துக்கொள்ள முடியாது. 

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் ஆகியவையும் ஒருவகையில் தீவிரவாத/ பயங்கரவாத இயக்கங்கள்தான். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகட்டும். ஆர்.எஸ்.எஸ். அல்லது பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்கள் ஆகட்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு விட்டுவைக்காது என்றும் அவர் தெரிவித்தார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், இந்த இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இவர்களின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மைசூரு, தும்கூரு மற்றும் கலபுராகி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களின் முன்னர் இன்று பா.ஜ.க.வினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று சென்ற கர்நாடக மாநில முன்னாள் மந்திரி சுரேஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க. பிரமுகர்கள் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு எதிராக இன்று புகார் மனு அளித்துள்ளனர். தங்களது புகாருக்கு ஆதரமாக சி.டி. ஒன்றையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். 

முதல் மந்திரி சித்தராமையாவின் கருத்து சட்டவிரோதமாக உள்ளதால் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கமிஷனரிடம் புகார் அளித்ததாகவும் தங்களது புகார் மனுவை வாசித்துப்பார்த்த போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் செய்தியாளர்களிடம் கர்நாடக மாநில முன்னாள் மந்திரி சுரேஷ் குமார் தெரிவித்தார். #tamilnews #Siddaramaiah #bjp

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com