

பெங்களூர்:
பெங்களூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் அழைத்துவரப்பட்டு இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளன. நீச்சல் குளம், ஜிம், மசாஜ் கிளப், விளையாட்டு மைதானம் மற்றும் சைவ, அசைவ உணவு விடுதிகள் உள்ளன. நடை பயிற்சி மேற்கொள்ள இட வசதியும் உள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் அவர்களது உறவினர்கள், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் டெல்லி மேல்- சபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேல் ஆகியோரிடம் பேச செல்போன் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து வரும் போன் அழைப்புகளை எடுத்து பேச அனுமதி கொடுப்பதில்லை.
இந்த நிலையில் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் கோவா ரவாரி, தர்ஷிபாய் கானாபூர், மகேஷ்படேல் உள்ளிட்ட சிலர் வடக்கு குஜராத் பகுதியில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே குஜராத் சென்று வெள்ளம் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூற எங்களை அனுப்பி வையுங்கள் என்று கர்நாடக மாநில மந்திரி சிவகுமார், சுரேஷ் எம்.பி. குஜராத் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சக்திசின்காகோயல் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. 7-ந் தேதி வரை இங்கே தங்கி இருக்க வேண்டும் என்றும் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர்.
இன்று முதல் 7-ந் தேதி வரை எம்.எல்.ஏ.க்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். இன்று அவர்களை சொகுசு பஸ்களில் மடிகேரி பகுதிக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக மந்திரி சிவகுமார் கூறுகையில், கர்நாடகாவில் உள்ள சுற்றுலாத்தலங்களை காண்பதற்காக இவர்கள் வந்துள்ளனர். இவர்களை கவுரவிக்க வேண்டியது கர்நாடக காங்கிரசின் கடமை என்றார்.