

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதை எதிர்த்து 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் துவங்கியது.
மேலும், 6 வார காலத்திற்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மொழிமாற்றம் செய்து வழங்க வேண்டும் என்று பதிவாளரை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் முக்கிய விஷயம் எட்டு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். அதேபோல், மனுதாரர்கள் எட்டு வாரத்திற்குள் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, ஆட்சேபம் இருந்தால் தெரிவித்துவிட வேண்டும் எனவும் கூறினர்.