

நாகர்கோவில்:
ஆஸ்டின் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டால்தான் அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி பொருட்கள் தட்டுப்பாடு காரணத்தால் மிகவும் உயர்ந்துள்ளது. எனவே அந்த பொருட்களுக்கான விலையை மாவட்ட நிர்வாகமே நிர்ணயித்து அந்த விலைபட்டியலை அனைத்து கடைகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
மே மாதத்திற்கான ரேசன் பொருட்களை இந்த மாதமே ரேசன் கடை ஊழியர் மூலமாக நேரிடையாக அனைத்து வீடுகளுக்கும் வழங்க வேண்டும். பல ரேசன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் இல்லை எனக்கூறி ஏப்ரல் மாத பொருட்களை வழங்கப்படாத நிலையில் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து கிராம பகுதி களுக்கும் ஊராட்சி பேரூராட்சி வாரியாக நடமாடும் கடைகள் மூலமாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
பல விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்கள் பழுது ஏற்பட்டு ரிப்பேர் செய்ய முடியாமல் தென்னை மற்றும் வாழைப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாய மோட்டார் பழுது பார்க்கும் பிளம்பர் களுக்கு அடையாள அட்டை வழங்கி மேற்படி பணியை மேற்கொள்ள உதவ வேண்டும்.
2 மாத காலமாக பொதுமக்களுக்கு எந்த வருவாயும் இல்லாத காரணத்தால் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதைப்போல் ஆரம்ப கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.