

நியூயார்க்:
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை பெய்ததால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தென்மேற்கு மாநிலமான அரிசோனாவில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள கிழக்கு வெர்டே ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நிலையில், வெள்ளம் அவர்களை அடித்துச்சென்றது. இதில், 9 பேர் பலியாகினர். ஒருவர் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
வெள்ளம் வருவது குறித்து உரிய முன்னெச்சரிக்கை எதுவும் அளிக்காததால், இந்த விபரீதம் நடந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.