

சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘‘அமைப்பாய் திரள்வோம்’’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் புத்தகத்தை வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நக்கீரன் கோபால், விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் ஒரே நாடு, என்று முழுக்கமிட்டு வரும் நிலையில் இந்த புத்தகம் வெளிவந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சரியான நேரத்தில் திருமாவளவன் நூலை வெளியிட்டு இருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் சமஸ்கிருதம் பாடியுள்ளனர். இந்த போக்கை டெல்லியில் வைத்து கொள்ளுங்கள். இங்கு நிறுத்தி கொள்ள வேண்டும். இது மத்திய அரசு தமிழர்களின் உச்சந்தலையில் மிதிக்கும் செயலாகும்.
சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் கலந்து கொண்டபோது தேசிய கீதம் பாடப்படவில்லை. தியேட்டர்களில் தேசிய கீதம் பாடவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இப்போது மோடி மீது எந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது?
தமிழக கவர்னரின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. தொழில் முனைவோருக்கு ராஜ்பவன் வாசல் திறந்து இருக்கும் என்று கூறியுள்ளார். இவர் கவர்னர் வேலையை செய்கிறாரா? வேறு என்ன செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், இந்த நூல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அணி திரண்டால் தான் மாற்றம் கொண்டு வர முடியும். இப்போது உள்ள இந்த கூட்டம் குறையக்கூடாது. ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் தொல்.திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
இந்த நூல் ஒரு கட்சிக்காக எழுதப்படவில்லை. அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடிய நூல். மக்களை அமைப்பாக்குகிற பணியில் ஈடுபடுவோருக்கு இது ஒரு வழிகாட்டும் நூலாக அமையும்.
அரசும், மதமும் ஒரு அமைப்பாக இருப்பதால் தான் அவை அதிகார வலிமை கொண்டவையாக உள்ளன. அதுபோல மக்களும் அதிகார வலிமை பெற வேண்டுமென்றால் அமைப்பாக அணிதிரள வேண்டும். குறிப்பாக அரசியல் அமைப்பாக, அரசியல் சக்தியாக திரண்டு எழ வேண்டும்.
அதற்கு கொள்கை- கோட்பாடுகள் மிக முக்கியமானவை. இவை இல்லையென்றால் எந்த அமைப்பும் நீண்டகாலத்துக்கு இயங்க முடியாது.
களத்தில் பணியாற்றக் கூடியவர்கள் ஒரு போதும் தங்களை முன்னிறுத்துவதில் குறியாக இருக்கக் கூடாது. அமைப்பையும், கொள்கை- கோட்பாடுகளையும் முன்னிறுத்த வேண்டும். இவ்வாறு செயல்படவில்லை என்றால் நாம் தலைவர்களாக வளர முடியாது. அமைப்பை அதிகாரத்தை வென்றெடுக்க நாம் இந்த நிகழ்வில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில பொருளாளர் முகம்மது யூசுப், வன்னி அரசு, பாவரசு, எஸ்.எஸ்.பாலாஜி, சேகுவேரா, பார்வேந்தன், மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, ஆதவன், இரா.செல்வம், ரவிசங்கர், அம்பேத் வளவன், அன்புசெழியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #tamilnews #thirumavalavan #kanbalagan #vaiko #thirunavukkarasar