திண்டிவனம் அருகே விபத்து: தாய்-மகன் உள்பட 4 பேர் பலி

திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே விபத்து: தாய்-மகன் உள்பட 4 பேர் பலி
Published on

திண்டிவனம்:

காஞ்சிபுரம் மாவட்டம் போவூர் மகாத்மாகாந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அமுதா (வயது 45).

இவர் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள கொஞ்சிமங்கலம் பகுதியில் நடைபெறும் உறவினர் திருமணத்துக்கு குடும்பத்துடன் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி அமுதா, அவரது மகன் ராஜேஷ்குமார் (21) மற்றும் அமுதாவின் தங்கை மகன் புனிதன் (7), மகள் புனிதா (8) ஆகியோர் கொஞ்சிமங்கலத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் காஞ்சிபுரத்துக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் அமுதா உள்பட 4 பேரும் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராஜேஷ்குமார் ஓட்டினார். அந்த மோட்டார் சைக்கிள் இன்று அதிகாலை திண்டிவனம் சாரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று ராஜேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ்குமார், புனிதா, புனிதன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அமுதா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த அமுதாவை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அமுதா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com