சட்டசபை விதிகளின்படி 18 பேர் தகுதி நீக்கம்: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சட்டசபை விதிகளின்படி 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார்.
சட்டசபை விதிகளின்படி 18 பேர் தகுதி நீக்கம்: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
Published on

புதுடெல்லி:

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.

டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அரசு மத்திய அரசை சந்திப்பது இயல்பான ஒன்று. அந்த வகையில் மத்திய அரசுக்கு ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அரசு பல முன்மொழிவுகளை அனுப்பி இருந்தது.

அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள், அதற்கான நிதி விவரங்கள் குறித்து ஆலோசிக்க டெல்லி வந்திருக்கிறோம். தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்கும் திட்டம் தற்போது இல்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சபாநாயகர் எடுத்த முடிவு. அந்த முடிவில் நான் கருத்து சொல்லக்கூடாது. அரசியலமைப்பில் சட்டமன்றம் ஒரு அங்கம். எனவே அது பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காகவே 18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு, அடிப்படையில் உண்மை இல்லாதது. நானும் சபாநாயகராக இருந்திருக்கிறேன். சட்டசபை விதிகளின் அடிப்படையிலேயே சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்திருக்கிறார் என்பது எனது கருத்து.

நம்பிக்கை வாக்கெடுப்பை பொறுத்தவரை, சட்டவிதிகளில் தெளிவாக என்ன கூறப்பட்டு இருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் எடுத்துக்கொள்ள முடியும். கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு இருப்பதால் நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரனை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. டி.டி.வி.தினகரனும், மு.க.ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரை பாம்பு போல் பின்னி பிணைந்து இருக்கிறார்கள். அவர்கள் பிரிக்க முடியாத உறவு. இது உலகத்திற்கே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com