என் மலர்
பெண்கள் உலகம்

கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் இல்லற இன்பங்கள்...
- உடல் ரீதியான தொடுதல் மூலம் அன்பு, ஆறுதல், அரவணைப்பு போன்றவற்றை வெளிப்படுத்தலாம்.
- தம்பதியருக்குள் ஆரோக்கியமான உறவு நீடிக்க சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது.
இல்லற வாழ்க்கையை இனிமையாக வாழ கணவன்- மனைவி இருவரும் பரஸ்பர புரிதலோடும், அன்போடும், விட்டுக்கொடுத்து செல்லும் மனதோடும் இருக்க வேண்டும். மேலும், ஒருவரின் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் அவர் மனம் நோகாதபடி நடக்க வேண்டும். அதிலும் பெண்களுக்கு தங்கள் கணவரிடம் ஒருசில எதிர்பார்ப்புகள் இருக்கும். சொல்லாமலேயே தன்னுடைய உணர்வுகளை கணவர் புரிந்து கொண்டு நடந்து தன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் பற்றியும், அதனை கணவர்மார்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்...
ஆதரவாக இருத்தல்
குடும்ப விஷயமோ, நண்பர்கள் மத்தியில் நடக்கும் விவாதமோ மனைவியின் கருத்துக்கு கணவர் ஆதரவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் ஒருபோதும் மனைவியின் மதிப்பு, மரியாதை குறைவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. எந்த சூழலிலும் அசைக்கமுடியாத ஆதரவை அளிக்கும் பட்சத்தில் மனைவி பாதுகாப்பான சூழலை உணர்வார். கணவர் தனக்கு துணையாக இருப்பதை எண்ணி மன வலிமையும் கொள்வார்.
கனவு-லட்சியத்துக்கு ஆதரவு அளித்தல்
பெரும்பாலும் மனைவியின் அதிகபட்ச ஆசையே தன்னுடைய நெடுநாளைய கனவு, லட்சியம் நிறைவேற கணவர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். தன்னுடைய செயல்பாடுகளை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
தனது கனவை நிறைவேற்றித்தர வேண்டும் என்று விரும்புவார். அதனை நிறைவேற்றுவதற்கு சிறு முயற்சி எடுத்தாலே போதும். அகமகிழ்ந்து கணவரை கொண்டாட தொடங்கி விடுவார். அவரின் ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்தாலே போதுமானது.
அன்பை வெளிப்படுத்துதல்
உடல் ரீதியான தொடுதல் மூலம் அன்பு, ஆறுதல், அரவணைப்பு போன்றவற்றை வெளிப்படுத்தலாம். உதாரணமாக மனைவி சோர்வாக இருக்கும் போது அவரது கைகளை இறுக பற்றிக்கொள்வது, கால்களை நீவி விடுவது, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவது போன்ற செயல்பாடுகளின் மூலமும் அன்பை வெளிப்படுத்தலாம்.
'நான் உனக்காக இருக்கிறேன்', 'உன் நலனில் அக்கறை கொள்கிறேன்', 'உன்னை பற்றி கவலைப்படுகிறேன்' என்பன போன்ற வார்த்தைகள் மனைவியிடத்தில் கணவர் மீதான மதிப்பை கூட்டும்.
வேலை செய்தல்
ஒருசில வேலைகளை மனைவிதான் செய்தாக வேண்டும் என்ற ஆணாதிக்க எண்ணம் இல்லாமல் கணவர் செயல்பட வேண்டும். மனைவிக்கு வீட்டு வேலைப்பளு அதிகரிக்கும்பட்சத்தில் அவர் கேட்காமலேயே கணவர் சின்ன சின்ன உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.
காபி தயாரிக்கலாம், காய்கறிகளை நறுக்கலாம், துணிகளை அயர்ன் செய்யலாம் என்பன போன்ற அன்றாட பொறுப்புகளில் மனைவியின் சுமையை குறைக்க முன்வர வேண்டும். அது கணவர் மீதான மதிப்பை உயர்த்தும்.
சுதந்திரம் கொடுத்தல்
தம்பதியருக்குள் ஆரோக்கியமான உறவு நீடிக்க சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் கட்டுப்படுத்தும் எண்ணத்துடனோ, ஒருவர் மற்றவருடைய செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கத்துடனோ நடந்து கொள்வது நல்லதல்ல.
முதலில் இருவருக்குமிடையே நம்பிக்கை நிலவ வேண்டும். அதுவே உறவை வலுவாக கட்டமைத்து விடும். அவரவர் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பது, பிடித்தமான பொழுதுபோக்குகளை தொடர அனுமதிப்பது என சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அதனை மனைவி ரொம்பவே விரும்புவார்.
ஆச்சரியப்படுத்துதல்
மனைவியை திடீரென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தவைக்கும் வித்தை கணவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பரிசளிக்க வேண்டியதில்லை. அர்த்தமுள்ள செயல்பாட்டில் ஈடுபட்டாலே போதுமானது. மனைவி விரும்பும் புத்தகத்தையோ, ஒப்பனை பொருளையோ வாங்கி கொடுக்கலாம்.
வீட்டிற்கு வர தாமதமாகும் பட்சத்தில் அவரை இதயப்பூர்வமாக நெகிழவைக்கும் குறுஞ்செய்தியை அனுப்பலாம். அவர் விரும்பி சாப்பிடும் இனிப்பு பலகாரத்தை பரிசளிக்கலாம். அவர் விரும்பி சுற்றிப்பார்க்க சுற்றுலாத்தலத்திற்கு செல்வதற்கான பயண திட்டத்தை இறுதி செய்து பஸ், ரெயில் டிக்கெட் அல்லது ஓட்டல் அறை பதிவு செய்த தகவலை காண்பித்து அவரை குஷிப்படுத்தலாம்.
கவனச்சிதறல் இன்றி கேட்டல்
மின்னணு சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த டிஜிட்டல் காலத்தில் வீட்டில் இருக்கும் சமயங்களிலும் கூட பெரும்பாலான நேரத்தை மொபைல் போனிலேயே செலவிடும் சுபாவம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் மனைவி பேசிக்கொண்டிருக்கும்போது மொபைல்போனை பார்த்தபடியே கவனிக்கும் பழக்கம் நிறைய கணவன்மார்களிடம் இருக்கிறது. சில சமயங்களில் மனைவி என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒப்புக்காக தலையை ஆட்டுவதும் உண்டு. அப்படி கவனச்சிதறலுடன் கேட்பதை மனைவி ஒருபோதும் விரும்ப மாட்டார்.
கணவர் தான் சொன்னதை கவனித்தாரா? என்று குறுக்கிட்டு கேள்வி கேட்கவும் செய்வார். அப்போது சரியாக பதில் சொல்ல முடியாமல் கணவன் தடுமாறுவது மனைவியிடத்தில் கோபத்தை அதிகப்படுத்திவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனைவி பேச ஆரம்பித்ததுமே மொபைல்போனை ஒதுக்கிவைத்துவிட்டு கேட்பது தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மனைவியை உணர வைக்கும். பெரும்பாலும் மனைவி மனக்கஷ்டமாக உணரும் தருணத்தில்தான் கணவரிடத்தில் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், புரிதலையும் தேடுகிறாள். தன் எண்ணங்களை கணவரிடத்தில் வார்த்தையாக கொட்டுவதற்கு விரும்புவார். அதனை புரிந்து கொண்டு கணவர் செயல்பட்டாலே போதும்.






