என் மலர்
பெண்கள் உலகம்

வாழ்க்கையை வசந்தமாக்கும் அன்றாட பழக்கங்கள்...
- வாழ்க்கை மிகவும் குறுகியது. நிச்சயமில்லாதது.
- ஒப்பீடு செய்வது போலவே மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள்.
வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கும், வசந்தமாக்குவதற்கும் அன்றாட வாழ்வியலில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைப்பதாக அவை இருக்க வேண்டும். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றி பார்ப்போம்.
அமைதி
தினமும் குறைந்தபட்சம் பகலில் 10 நிமிடங்களாவது மனதுக்கு ஓய்வு கொடுங்கள். எந்த வேலையிலும் ஈடுபடாமல், எது பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருங்கள். அந்த சமயத்தில் மனதில் ஏதேனும் நினைவுகளோ, வேறு எது பற்றிய யோசனையோ கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும்.
திட்டமிடல்
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஊடுருவுவதற்கு சரியான திட்டமிடுதல் இல்லாததே காரணமாகும். காலையில் எழுந்ததும் இன்றைய நாளில் உங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டு திட்டமிடுதல் வேண்டும். அதற்கு ஏற்ப அந்த செயலில் ஈடுபட்டாலே அதற்கே நேரம் சரியாக இருக்கும். அடுத்தடுத்த வேலையை நோக்கி நகர வைத்து விடும். தேவையற்ற சிந்தனை, எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
நேர்மறை
கடந்த கால பிரச்சனைகள், எதிர்மறை எண்ணங்கள்தான் பெரும்பாலானவர்களின் மன நிம்மதியையும் குலைக்கும். அதுபற்றிய சிந்தனையில் மூழ்க வைத்து நேரத்தை வீணடிக்கும். வாழ்க்கை மீது வெறுப்புணர்வை உண்டாக்கும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அத்தகைய எண்ணங்கள் தலைதூக்கும்போது கவனத்தை திசை திருப்பும் செயலில் ஈடுபடுங்கள். நேர்மறையான விஷயங்களில் மனதை பதியவையுங்கள்.
மன்னிப்பு
வாழ்க்கை மிகவும் குறுகியது. நிச்சயமில்லாதது. வாழும் வரை ஆனந்தமாக, வாழ்க்கையை ரசித்து வாழபழகுங்கள். யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள். உறவோ, நட்போ பகைமை கொள்ளாதீர்கள். அவர்கள் பற்றிய எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து நிம்மதியை குலைக்க இடமளிக்காதீர்கள். யாரையும் விரோதியாக பார்க்காதீர்கள். உங்கள் மனதை புண்படுத்தும் வகையில் தவறு செய்திருந்தாலும் சில காலம் கழித்தாவது மன்னிக்க பழகுங்கள். மன்னிப்பு அவர்களை பற்றி மனதில் பதிந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து விடும். அவர்களை பற்றிய எண்ண ஓட்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்த உதவிடும்.
உதவி
நண்பரோ, உறவினரோ, முன்பின் அறியாதவரோ யாராக இருந்தாலும் தக்க சமயத்தில் அவர்கள் எதிர்பார்க்காமலேயே உதவி செய்ய முன் வாருங்கள். உதவி கேட்க தயக்கம் காட்டுபவர்களாக இருந்தால் உடனே உதவிடுங்கள். அவர்களாக கேட்கும் வரை காத்திருக்காதீர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவராக, கொடுத்து மகிழும் சுபாவம் கொண்டவர்களாக இருங்கள். பிறரிடம் இருந்து 'வாங்குபவர்களாக' இருக்காதீர்கள்.
விருப்பம்
ஒப்பீடு செய்வது போலவே மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். உங்களுக்கு பிடித்தமான செயலாக இருந்தால் தாராளமாக செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கை உங்களுக்கானது. அதை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
குடும்பம்
வேலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் நலம் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். உடல் நலம் பாதிப்புக்குள்ளானால் வேலை உங்களை விலக்கி வைத்துவிடும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்.
மகிழ்ச்சி
வாழ்க்கையில் சின்ன சின்ன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடந்தாலும் அதனை கொண்டாடுங்கள். அது தரும் இன்பத்தை உங்களால் மட்டுமே உணர முடியும். அதனை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள். அதனை மீண்டும் அனுபவிக்க முடியாது.
மனப்பக்குவம்
எந்த விஷயத்துக்கும் சட்டென்று டென்ஷன் ஆகாதீர்கள். நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதுவும் அப்படியே இருக்காது. நிலைமை மாறும். கடந்த கால கசப்பான நிகழ்வுகளை நினைவு கூராதீர்கள். அது நிகழ்காலத்தை பாழாக்கி விடும்.






