search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கூந்தல் ஆரோக்கியத்திற்கு வீட்டிலேயே ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிப்பது எப்படி?
    X

    கூந்தல் ஆரோக்கியத்திற்கு வீட்டிலேயே ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிப்பது எப்படி?

    • இயற்கை முறையில் ஷாம்பூ பயன்படுத்துவது கூந்தலுக்கு நல்லது.
    • வீட்டிலேயே ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    பெண்கள், தங்கள் கேசத்தைத் தூய்மையுடனும் வாசனையுடனும் பராமரிப்பது அவசியம். ஆனால், கெமிக்கல் கலந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தி, தங்கள் தலைமுடியை சிலர் பாழாக்கிக் கொள்கிறார்கள்.

    பெரும்பாலான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களில் Sodium lauryl sulfate (SLS), Sodium laureth sulfate (SLES), Parabens, Formaldehyde உள்ளிட்ட கொடிய ரசாயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, உயிருக்கே ஆபத்து நேரவும் வாய்ப்புள்ளது. தவிர, முடி உதிர்தல், முடி உடைதல், மயிர்க்கால்களில் பாதிப்பு, பொடுகு, தலைமுடி வறட்சி, அரிப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, அலர்ஜி, இனப்பெருக்கப் பாதிப்பு, நரம்பியல் மண்டல பாதிப்பு மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். விளம்பரங்கள் மற்றும் இணைய விமர்சனங்களைப் பார்த்து அழகு சாதன பொருள்களை வாங்காமல், மூலப்பொருள்களின் விளக்கப் பட்டியலைப் பார்த்து வாங்குவதே பாதுகாப்பானது.

    மேற்காணும் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க வீட்டிலேயே இயற்கையாக ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரித்து பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்-கொள்ளுங்கள்.

    இயற்கை ஷாம்பூ

    தேவையானவை:

    பூந்திக் கொட்டை - அரை கிலோ,

    சீயக்காய் - 200 கிராம்,

    காய்ந்த நெல்லிக்காய் - 100 கிராம்,

    வெந்தயம் - 20 கிராம்.

    செய்முறை: பூந்திக்கொட்டையிலுள்ள விதையை நீக்கிவிடவும். தோல் பகுதியுடன் சீயக்காய், காய்ந்த நெல்லிக்காய், வெந்தயம் சேர்த்து, மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும் (மிக்ஸியை பயன்படுத்த வேண்டாம்). பின்னர் அந்தப் பொடியை ஈரப்பதமில்லாத சுத்தமான பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இதிலிருந்து 2 டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து இரும்புக் கடாயில் போட்டு, 100 மில்லி அளவு தண்ணீர் சேர்க்கவும். நன்றாக நுரைத்து, ஷாம்பூ பதம் வரும்வரை கொதிக்கவைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையை இரவு முழுவதும் கடாயில் அப்படியே வைக்கவும். மறுநாள் காலை வடிகட்டி, தலைக்குத் தேய்த்து குளிக்கவும்.

    குறிப்பு: அரைத்து வைத்துள்ள பொடியை அப்படியே சீயக்காய் போன்றும் பயன்படுத்தலாம்.

    நேச்சுரல் கண்டிஷனர்

    தேவையானவை:

    ஷியா வெண்ணெய்(Shea Butter)-50 கிராம்,

    ஆர்கன் எண்ணெய் (Argan oil)- 1 டீஸ்பூன்,

    விளக்கெண்ணெய் (Castor oil) - 2 டீஸ்பூன்.

    செய்முறை: ஒரு பேனில் (Pan) தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதன்மீது ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதனுள் ஷிபா வெண்ணெயைப் போட்டு உருக்கவும் (இதற்கு Double boiler என்று பெயர்). பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய், ஆர்கன் எண்ணெய்ச் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியதும், எக் பீட்டரால் க்ரீம் பதம் வரும் வரை நன்றாக அடித்து, சுத்தமான பாட்டிலில் அடைக்கவும்.

    குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் 15 நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

    Next Story
    ×